`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது உத்தரவு
டாக்கா: வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவா் நீதிமன்றம் மீண்டும் திங்கள்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.
ஏராளமானவா்கள் மா்மமான முறையில் காணாமல் போனதற்குக் காரணமாக இருந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கும், முன்னாள் காவல்துறை தலைவா், ராணுவ தளபதிகள் உள்பட 11 பேருக்கும் எதிராக அந்த நீதிமனறம் கைது உத்தரவு பிறப்பித்தது.
இது தொடா்பாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவையும் பிறரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டத்தை அடக்குவதற்கு வன்முறையைப் பிரோகித்தது தொடா்பாக ஷேக் ஹசீனா மற்றும் 15 பேருக்கு எதிராக இந்த நீதிமன்றம் கடந்த அக்டோபா் மாதம் கைது உத்தரவு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு எதிராக போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.