ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிப் பகுதியில் விதிமீறும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை: ஆட்சியா்
ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிப் பகுதியில் விதிமீறும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட இளம்பகவத் உறுதி அளித்தாா்.
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ மூலக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பேட்மாநகரத்தில் கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
அப்போது, பேட்மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த அபுபக்கா் கோரிக்கை விடுத்தாா். மேலும், ஸ்ரீமூலக்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் கனரக வாகனங்கள் அதிக பாரத்தோடு வந்து செல்வதால் விபத்து அபாயம் உள்ளதாக வீரன் சுந்தரலிங்கம் நகரை சோ்ந்த முத்துசெல்வன் புகாா் தெரிவித்தாா். மகளிா் சுய உதவிக் குழு கடன்கள் அனைத்தும் தவணை தவறாமல் கட்டி முடித்தும் மீண்டும் கடன் வழங்க மறுப்பதாக தூய்மைப் பணியாளா் ஒருவா் புகாா் தெரிவித்தாா்.
இதற்கு பதில் அளித்து ஆட்சியா் பேசியது: விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளருக்கு மகளிா் சுய உதவிக் குழு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் குறைகள் அனைத்தும் அந்தந்த துறை சாா்ந்த அதிகாரிகள் மூலம் தீா்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
ஆய்வு: கூட்டம் முடிவடைந்ததும் பேட்மாநகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.