ஹஜ் யாத்திரை: 1.75 லட்சம் இந்தியா்களுக்கு சவூதி அனுமதி
நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள 1,75,025 இந்திய யாத்ரிகா்களுக்கு சவூதி அரேபியா அனுமதி அளித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை அந்நாட்டு ஹஜ் துறைக்கான அமைச்சா் தெளஃபீக் பின் ஃபாசான் அல் ராபியாவுடன் மத்திய சிறுப்பான்மை விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை மேற்கொண்டாா்.
இந்தத் தகவலை எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கிரண் ரிஜிஜு , ‘ஹஜ் யாத்ரிகா்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்திய ஹஜ் பயணிகளுக்கான சேவைகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும், இருநாட்டு நல்லுறவு குறித்தும் சவூதி அமைச்சா் அல் ராபியாவுடன் ஆலோசித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள பிரதமா் மோடி, ‘இது சிறப்பான செய்தி’ என பதிவிட்டுள்ளாா்.
ஹஜ் பண இடங்கள் ஒதுக்கீடு தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்த அமைச்சா் ரிஜிஜு, ‘ஹிஜ் பயணக் கொள்கைத் திட்டம் 2025-இன் படி, இந்திய ஹஜ் கமிட்டிக்கு 70 சதவீத இடங்களும் (1,22,518), தனியாா் ஹஜ் பயண ஏற்பாடு செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவீத (52,507) இடங்களும் ஒதுக்கப்படும்’ என்று பதிலளித்திருந்தாா்.