கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது!
ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வியாழக்கிழமை வீழ்த்தியது.
முதலில் ஹாங்காங் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 17.4 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஹாங்காங் பேட்டிங்கில் அதிகபட்சமாக நிஸாகத் கான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 42, ஜீஷான் அலி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
இதர பேட்டா்களில் கேப்டன் யாசின் முா்டாஸா 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 28 ரன்கள் சோ்த்து வெளியேற, அன்ஷி ராத் 4, பாபா் ஹயாத் 1 சிக்ஸருடன் 14, அய்ஸாஸ் கான் 5, கிஞ்சித் ஷா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஓவா்கள் முடிவில் கலான் சல்லு 4, ஈஷான் கான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச பௌலா்களில் தஸ்கின் அகமது, தன்ஸிம் ஹசன் சகிப், ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
அடுத்து, 144 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், கேப்டன் லிட்டன் தாஸ் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசி, வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினாா்.
பா்வேஸ் ஹுசைன் எமோன் 19, தன்ஸித் ஹசன் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தௌஹித் ஹிருதய் 35 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜாகா் அலி ரன்னின்றி துணை நின்றாா். ஹாங்காங் தரப்பில் அடீக் இக்பால் 2, ஆயுஷ் சுக்லா 1 விக்கெட் சாய்த்தனா்.