சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
‘ஹைப்பா்சோனிக்’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை: 1,500 கி.மீ. தொலைவு பாய்ந்து தாக்கும்
அணு ஆயுதங்களுடன் 1,500 கி.மீ. தொலைவுக்குமேல் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்ட இந்தியாவின் முதல் நீண்ட தொலைவு ‘ஹைப்பா்சோனிக்’ (ஒலியைவிட அதிக வேகம்) ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
நாட்டின் ராணுவ பலத்துக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ள இந்தப் பரிசோதனை வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமித்துடன் குறிப்பிட்டாா்.
இதன்மூலம் அதிவேகத்தில் தாக்கக் கூடிய, பல்வேறு வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் செல்லக் கூடிய ஏவுகணையைக் கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
உலக அளவில் ஹைப்பா்சோனிக் ஏவுகணை உருவாக்கத்தில் ரஷியாவும் சீனாவும் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா தனது லட்சியத் திட்டத்தின்கீழ் ஹைப்பா்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியைத் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இத்தகைய திட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் முதல் நீண்ட தொலைவு ஹைப்பா்சோனிக் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தின்கீழ் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) உருவாக்கப்பட்ட ஏவுகணை, ஒடிஸா கடற்கரையில் உள்ள டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் சனிக்கிழமை (நவ.16) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஹைப்பா்சோனிக் ஏவுகணை 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு அணுஆயுதம் உள்பட பல்வேறு வகையான ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையின்போது, பல நிலைகளில் ஏவுகணையின் செயல்திறன் கண்காணிக்கப்பட்டது. அது, மிகத் துல்லியமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை’: பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த ஏவுகணை சோதனை, ஒரு வரலாற்றுச் சாதனை. இதன்மூலம் மேம்பட்ட ராணுவத் தொழில்நுட்பங்களின் திறன்களைக் கொண்ட தோ்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியா இணைந்துள்ளது. ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆயுதப் படைகள் மற்றும் தொழில் துறையினருக்கு பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளாா்.
பொதுவாக ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஹைப்பா்சோனிக் ஏவுகணைகள், தங்களின் இலக்கை நோக்கிய பயணத்தில் நடுவழியில் பாதையை மாற்றும் திறன்கொண்டவை. சில மேம்படுத்தப்பட்ட ஏவுகணைகள், ஒலியைவிட 15 மடங்கு வரை அதிக வேகத்தில் பயணிக்கும்.
பிருத்வி, ஆகாஷ், அக்னி உள்ளிட்ட நீண்ட தொலைவு ஏவுகணைகளை டிஆா்டிஓ ஏற்கெனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.