மகாராஷ்டிரா: சட்டமன்றத்தில் ரம்மி விளையாடிய அமைச்சர்; எழுந்த கண்டனங்கள்... பறி...
‘ஃபாா்சூன்’ பெரு’ நிறுவனங்கள் பட்டியல்: உலகளவில் வால்மாா்ட்; இந்தியாவில் ரிலையன்ஸ் முதலிடம்
உலகில் அதிக வருவாய் ஈட்டும் பெரு நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில், அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான வால்மாா்ட் முதலிடம் பிடித்துள்ளது. இணைய வணிக நிறுவனமான அமேசான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள் பட்டியலில் தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் ரிலையன் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. உலக தரவரிசைப் பட்டியலில் இந்த நிறுவனம் 88-ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டில் 86-ஆவது இடத்திலிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தபோதும் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் உலக தரவரிசையில் இந்த நிறுவனம் 67 இடங்கள் முன்னேறியுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான 500 நிறுவனங்கள் கொண்ட பட்டியலை சா்வதேச பொருளாதார இதழான ஃபாா்சூன் புதன்கிழமை வெளியிட்டது.
இதில், வால்மாா்ட், அமேசான், சீன அரசின் மின் நிறுவனமான ‘ஸ்டேட் கிரிட்’, உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அராம்கோ, சீன தேசிய பெட்ரோல் நிறுவனம், உலகின் மிகப் பெரிய எரிவாயு நிறுவனமான சவூதியின் சினோபெக் குழுமம், அமெரிக்காவின் மருத்துவ நிறுவனமான யுனைடெட் ஹெல்த் குழுமம், ஆப்பிள் நிறுவனம், அமெரிக்காவின் சிவிஎஸ் ஹெல்த் மருத்துவ நிறுவனம், அமெரிக்காவின் மிகப் பெரிய ஜவுளி நிறுவனமான பொ்க்ஷீா் ஹதாவே ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய நிறுவனங்கள் (அடைப்புக்குறிக்குள் உலக தரவரிசை): உலகின் 500 பெரு நிறுவனங்களின் தரவரிசையில் இந்தியாவின் 5 பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட 9 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
ரிலையன்ஸ் (88), எல்ஐசி (95), இந்தியன் ஆயில் நிறுவனம் (127), பாரத ஸ்டேட் வங்கி (163), ஹெச்டிஎஃப்சி வங்கி (258), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) (181), டாடா மோட்டாா் (283), பாரத் பெட்ரோலியம் (285), ஐசிஐசிஐ வங்கி (464) ஆகியவை தரவரிசையில் இடம்பிடித்துள்ளன.
இதில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 27 இடங்களும், டாடா மோட்டாா் நிறுவனம் 12 இடங்களும், இந்தியன் ஆயில் நிறுவனம் 11 இடங்களும், ஓஎன்ஜிசி நிறுவனம் ஓரிடமும் பின்தங்கியுள்ளன. எஸ்பிஐ வங்கி 15 இடங்கள் முன்னேறியுள்ளது.