மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக...
அகர்பத்தி புகை: மூக்குக்கு வாசனையா, நுரையீரலுக்கு வேதனையா?
வீடுகளில் ஆரம்பித்து ஆன்மிகத் தலங்கள் வரைக்கும் அனைத்து இடங்களிலும் அகர்பத்தி பயன்பாடு இருக்கிறது. அகர்பத்தி புகை நம் ஆரோக்கியத்தில் ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா அவர்களிடம் கேட்டோம்.

''வாசனைப் பொருள், மரத்தூள், பொட்டாசியம் நைட்ரேட், கரி மற்றும் கோந்து ஆகியவற்றை வைத்துதான் அகர்பத்தி தயாரிக்கிறார்கள்.
இந்த அகர்பத்தியை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைட், ஃபார்மால்டிஹைட், நைட்ரஜன் டை ஆக்சைடு, பாலி அரோமேட்டிக் காம்பவுண்ட், பாலி சைக்ளிக் அரோமாட்டிக் காம்பவுண்ட், வொல்லாட்டைல் ஆர்கானிக் காம்பவுண்ட், பார்ட்டிகுலேட் மேட்டர் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளிவருகின்றன.
இவற்றை நாம் சுவாசிக்கும்போது சிலருக்கு ஒவ்வாமை நிகழலாம். சிலருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய உணர்வு தோன்றலாம்.
சிகரெட்டை பயன்படுத்தும்போது, புகையிலை எரிக்கப்பட்டு கார்பன் டை ஆஸ்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற தேவையற்ற வாயுக்களை நம் நுரையீரலுக்கு கொண்டு செல்கிறோம். இதனால் நுரையீரலுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது.
இதேபோல தான், நாம் அகர்பத்திப் புகையை சுவாசிக்கும்போதும் தேவையற்ற நச்சுக்களை சுவாசப்பாதையின் மூலம் நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறோம். இதுவும் நுரையீரலுக்கு எரிச்சலையே உண்டாக்குகிறது.

வீட்டில் அகர்பத்தியை தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வந்தால், அதை நுகரும் நபர்களுக்கு சுவாசப்பாதை சார்ந்த பிரச்னைகள், ஒவ்வாமை, எரிச்சல், தோல் மற்றும் கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த பிரச்னையான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease) ஆகியவை ஏற்படும். இவ்வளவு ஏன், நுரையீரல் புற்று வருவதற்குகூட வாய்ப்புள்ளது.
அலர்ஜி இருப்பவர்கள் அகர்பத்திப் புகையை நுகர்வதால் உடனடியாக இருமல், தும்மல், கண் எரிச்சல், மூச்சு விடுதலில் சிரமம், ஏற்கனவே ஆஸ்துமா இருப்பின் மூச்சுத்திணறல், இளைப்பு நோய் ஆகியவை ஏற்படும்.
வீட்டில் குழந்தைகள் குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியோர்கள், ஏற்கெனவே ஆஸ்துமா, அலர்ஜி இருப்பவர்கள் இருந்தால் வீட்டில் கட்டாயமாக சாம்பிராணியோ, அகர்பத்தியோ கொளுத்தக்கூடாது. அது அவர்களுக்கு தீவிர ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

அடைத்திருக்கும் அறைகளிலோ, வீடுகளிலோ அகர்பத்தியை ஏற்றுவது தவறானது. வீட்டில் அகர்பத்தி எரிக்கும்போது கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.
அந்தப் புகை வெளியேறுவதற்கான வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்த வேண்டும். சிறிய அறைகளில் ஏற்றுவதைக் காட்டிலும் நல்ல காற்றோட்டமான அறைகளில் அகர்பத்தியை ஏற்றலாம்.
இதற்குப்பதில், வீடு நறுமணமாக இருப்பதற்கு பூக்களைப் பயன்படுத்தலாம். பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட நறுமண எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
நீண்ட காலமாக அகர்பத்தி புகையை நுகர்ந்துகொண்டிருந்தீர்கள் என்றால், நுரையீரல் சிறப்பு நிபுணரை சந்தித்து உங்கள் நுரையீரல் தனது பணியை சரியாக செய்கிறதா என்று பரிசோதித்து கொள்ளவேண்டும்.
நுரையீரல் தன் பணியை சரியாக செய்யாதபட்சத்தில் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.