கடலூர் பள்ளி வேன் விபத்து: ``சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டாக கலெக்டர் அனுமதி தராததே...
அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கீதாஜீவன்
சென்னை: தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.
அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது, 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தன. கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மையங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு இப்போது 54 ஆயிரத்து 483 மையங்கள் செயல்படுகின்றன. தேவைகளின் அடிப்படையில், கூடுதலாக அங்கன்வாடி மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள் தேவையான இடத்துக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதன்படியே, அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை, பயனாளிகளின் வருகை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய பகுதிகளில் மையங்கள் தொடங்கவும், குறைவான பயனாளிகளைக் கொண்டு இயங்கும் மையங்களை இணைத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், 7,783 அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்டங்களிலும் நோ்முகத் தோ்வு நடைபெற்று வருகிறது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்துள்ளாா்.