அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
ரஷியாவில் ஏற்பட்ட அஜர்பைஜான் விமான விபத்து தொடர்பாக அஜர்பைஜான் அதிபரிடம் வருத்தம் தெரிவித்து ரஷிய அதிபர் புதின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த டிச. 25 அன்று விபத்துக்குள்ளானது.
விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையத்திற்கு அருகே வரும்போது அவசரமாக தரையிறக்க விமானி கோரிக்கை விடுத்துள்ளார். தரையிறங்குவதற்கு முன் வானில் சிறிது நேரம் வட்டமடித்த விமானம், தரையிறங்கும்போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
இந்த விபத்தில் 38 பேர் பலியாகியானதாகவும் இரண்டு குழந்தைகள் உள்பட 29 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கஜகஸ்தான் அரசு தகவல் வெளியிட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ரஷிய வான் பாதுகாப்புப் படை தவறுதலாக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ரஷிய அதிபர் புதின் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிக்க | அஜா்பைஜான் விமான விபத்து எதிரொலி: ரஷியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைப்பு
ரஷியாவின் க்ரோஸ்னி நகரில் பலமுறை இந்த விமானம் தரையிறங்கியுள்ளதாகவும், இந்த முறை க்ரோஸ்னி, மோஸ்டாக், விளாடிகவாக்ஸ் நகரங்களில் உக்ரைன் டிரோன் தாக்குதல்கள் நடத்தியதாகவும், அதனைத் முறியடிக்கும் நடவடிக்கைகளில் ரஷிய வான் பாதுகாப்புப் படை ஈடுபட்டு வந்ததாகவும் புதின் கூறினார்.
இந்தத் விபத்துக்குப் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த இடத்திலும் குறிப்பிடாத புதின் ரஷிய வான்வெளியில் இந்த சம்பவம் நடைபெற்றதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ’ரஷியாவின் வான்வெளியில் நிகழ்ந்த இந்தத் துயரமான சம்பவத்திற்கு விளாதிமர் புதின் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | ஏஐ தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்கும்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எச்சரிக்கை!
மேலும், இந்த விபத்து குறித்த விசாரணைக்கு ரஷியா தனது முழு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் நடுவானில் தாக்கப்பட்டது குறித்து வெளியான தகவலை அஜர்பைஜான் அதிகாரிகள் நம்புவதாக அவர்கள் வெளியிடும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும், இந்த விபத்தில் ரஷியா ஈடுபட்டிருப்பது குறித்து முன்னரே தெரிவித்ததாக அமெரிக்கா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.