பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 22 பேர் காயம்
பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இஸ்லாமாபாத்தின் பஹவால்பூர் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, ஃபதே ஜங் என்ற பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட 22 பேர் படுகாயங்களுடன் பெனாசீர் பூட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துக்கு ஓட்டுநர்களின் அலட்சியமே காரணம் என போக்குவரத்து காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கில்கிட் - பலுசிஸ்தான் பகுதியில் திருமண விருந்தினர்களுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர்.