``படத்தை வைத்து திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது; சிபிஐ விசாரணை தேவையற்றது'' -அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரத்தில் தமிழக அரசின் மீது குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இது அரசின் தவறு என்று சொல்வது தவறான கருத்தாகும். இந்த விவகாரத்தில் எந்த இடத்திலும் காவல் துறை தொய்வாக இருக்கவில்லை.
சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது. எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோருகிறார் எடப்பாடி பழனிசாமி. எதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முறை உள்ளது. தமிழக காவல்துறை மெத்தனமாக இருந்தால் சிபிஐ விசாரணை கேட்பது நியாயம். ஆனால், காவல்துறை சிலமணி நேரத்தில் கைது நடவடிக்கை எடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உள்ளது. முழு விசாரணையின்போதுதான் நடந்தது என்னவென்று தெரியும். போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது என்பது இடம், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை பொறுத்து காவல்துறை அனுமதி அளிக்கிறது. மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவருக்கும், தி.மு.க-வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் உறுப்பினராவதற்கும், பொறுப்பில் இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.
அப்படியென்றால், அதிமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி உள்ளனர். திமுக நிர்வாகிகளை போகிறபோக்கில் கைதானவர் அழைத்திருக்கலாம். அதற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருக்கலாம். புகைப்படம் இருப்பதாலேயே கைது செய்யப்பட்டவர் திமுக நிர்வாகி என்று சொல்ல முடியாது. இந்த கருத்தைத்தான் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த பின்னர்தான் உண்மை நிலைகள் தெரியும். இந்த விவகாரத்தை தமிழக அரசு எள்ளளவும் விட்டுக்கொடுக்காது" என்றார்.