மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
Bhopal: `போபாலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு...' - 337 மெட்ரிக் டன் நச்சுக்கழிவுகளை அகற்றும் ம.பி அரசு!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் யூனியன் கார்பைட்' பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை இருந்தது. 1984-ம் ஆண்டு அங்கிருந்து கசிந்த விஷ வாயுவால் 5,479 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உடல் உறுப்புகளை இழந்தும், நிரந்தர நோய்களாலும், சுகாதாரப் பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனாலும், அந்த தொழிற்சாலையில் சேமிக்கப்பட்டிருந்த 337 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அந்தக் கழிவுகளை அகற்ற சரியான நடவடிக்கை எடுக்காத மாநில அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து, அந்தக் கழிவுகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்தூருக்கு அருகில் இருக்கும் பிதாம்புரியில் செயல்படும் கழிவுகள் மறுசுழற்சி மையத்தில் நச்சுக் கழிவுகளை அகற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கழிவுகளை போபாலிலிருந்து பிதாம்புருக்கு சுமார் 250 கி.மீ தூரம் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, அதற்குரிய அம்சங்களுடன் 12 ட்ரங்குகள் பயன்படுத்தப்பட்டது.
முழுப் பாதுகாப்பு கவசங்களுடன் போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு அதிகாரிகள் முன்னிலையில் கழிவுகள் அகற்றப்பட்டது. அறிவியல் நெறிமுறைகளின் அடிப்படையில், மிகவும் பாதுகாப்பாக அந்தக் கழிவுகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த கழிவுகளை முற்றிலுமாக அழிக்க 3 முதல் 9 மாதங்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தூர் பகுதி மக்கள், இது சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளையும், மக்களின் உடல் நலத்தையும் பாதிக்கும் என அஞ்சுகிறார்கள்.