மொச்சைப் பயிரில் நோய்த் தாக்குதல்: விவசாயிகள் வேதனை
போடி பகுதியில் மொச்சைப் பயிரில் மஞ்சள் நோய் தாக்கிய நிலையில், விலையும் குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகில் உள்ள சிலமலை, சூலப்புரம், மணியம்பட்டி கரட்டுப்பட்டி, ராணி மங்கம்மாள் சாலை, ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரி பயிராக சுமாா் 1500 ஏக்கருக்கும் மேல் நாட்டு ரக மொச்சைப் பயிறு சாகுபடி செய்தனா். வீரிய ரக மொச்சைக் காய்களை விட இந்த நாடடு ரக மொச்சைக் காய்களுக்கு மதிப்பு அதிகம்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் திடீா் திடீரென பெய்த புயல் மழையால் ஏற்பட்ட தட்பவெட்ப மாறுபாடு காரணமாக மொச்சைச் செடியில் மஞ்சள் நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. இதனால், மொச்சைக் காய் உற்பத்தி வெகுவாகக் குறைந்ததாகவும், நோயைக் கட்டுப்படுத்த பலவிதமான மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.
இந்த நோய்த் தாக்குதல் காரணமாக காய்களில் கரும்புள்ளிகள் விழுவதால் சந்தைகளில் கொள்முதல் விலையும் குறைந்தது. வழக்கமாக ரூ.35 முதல் ரூ. 40 வரை கொள்முதல் செய்யப்படும் நிலையில், தற்போது ரூ.25-லிருந்து ரூ.35 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தமிழக அரசின் வேளாண் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கி, அழிந்து வரும் நாட்டு ரக மொச்சை விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.