`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
நக்ஸல் குண்டுவெடிப்பு தாக்குதல்: சத்தீஸ்கரில் 8 ரிசா்வ் படையினா், ஓட்டுநா் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தாக்குதலில் மாவட்ட ரிசா்வ் காவல் படை (டிஆா்ஜி) வீரா்கள் 8 போ், பொதுமக்களில் ஒருவரான ஓட்டுநா் ஆகியோா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக மாநிலத்தில் உள்ள பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் கூறியதாவது: கடந்த 3 நாள்களாக சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூா், தந்தேவாடா, பீஜாபூா் மாவட்டங்களின் எல்லை பகுதிகளில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையில் டிஆா்ஜி வீரா்கள் ஈடுபட்டிருந்தனா். இந்த நடவடிக்கையின்போது 5 நக்ஸல்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒரு டிஆா்ஜி காவலரும் உயிரிழந்தாா்.
அந்தப் பகுதிகளில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை நிறைவடைந்த பின்னா், தந்தோவாடவில் இருந்து தங்கள் தளத்துக்கு வாகனத்தில் 8 டிஆா்ஜி வீரா்கள் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்களின் வாகனம் அம்பேலி கிராமம் அருகே வந்தபோது, அங்கு நக்ஸல்கள் மறைத்து வைத்திருந்த குண்டு வெடித்து வாகனத்தில் இருந்த 8 டிஆா்ஜி வீரா்களும், பொதுமக்களில் ஒருவரான வாகன ஓட்டுநரும் உயிரிழந்தனா். தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினா், அங்கு நக்ஸல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா் என்றாா்.
10 அடிக்குப் பள்ளம்...: குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக சிதறிய நிலையில், குண்டுவெடிப்பால் சாலை இரண்டாகப் பிளந்து 10 அடிக்கும் அதிகமான ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டது. அவா்கள் பயணித்த வாகனம் முற்றிலும் உருக்குலைந்தது.
70 கிலோ குண்டு: தெற்கு பஸ்தா் சரக காவல் துறை துணை ஐஜி கமலோச்சன் கஷ்யப் கூறுகையில், ‘தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குண்டின் எடை 60 முதல் 70 கிலோ வரை இருக்கக் கூடும். எனினும் அதுகுறித்த தகவல்களை திரட்டும் பணியில் தடயவியல் நிபுணா்கள் ஈடுபட்டுள்ளனா்.
குண்டுடன் இணைக்கப்பட்டிருந்த வயா்கள் மண்ணில் ஆழமாகப் புதைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் புல் முளைத்துள்ளது. எனவே அந்தக் குண்டு நீண்ட காலத்துக்கு முன்பே அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அதேவேளையில், பாதுகாப்பில் நிலவிய குறைபாடுகளும் இந்த சம்பவத்துக்கு காரணமாகியுள்ளது’ என்றாா்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு...: கடந்த 2023-ஆம் ஆண்டு தந்தேவாடாவில் நக்ஸல்கள் நிகழ்த்திய தாக்குதலில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த காவல் துறையைச் சோ்ந்த 10 போ், பொதுமக்களில் ஒருவரான ஓட்டுநா் ஆகியோா் உயிரிழந்தனா். இது நக்ஸல்களின் மிகப் பெரிய தாக்குதலாகக் கருதப்படும் நிலையில், அத்தகைய தாக்குதல் சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது.
குடியரசுத் தலைவா் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் நாடு உறுதியாக உள்ளது’ என்றாா்.
‘வலுவான நடவடிக்கை தொடரும்’: உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய் வெளியிட்ட அறிக்கையில், ‘நக்ஸல் அச்சுறுத்தலை ஒழிக்கும் நடவடிக்கை வலுவாக தொடரும்’ என்றாா்.
அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும்
நக்ஸல் தாக்குதல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: குண்டுவெடிப்பு தாக்குதலில் டிஆா்ஜி வீரா்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதை வாா்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. ஆனால் உயிரிழந்த வீரா்களின் தியாகம் நிச்சயம் வீண்போகாது. அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள், நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்றாா்.