மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம்!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று (ஜன.2) மதியம் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தின் மலைகள் சூழ்ந்த மாவட்டமான சூராசந்திரப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (ஜன.2) மதியம் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தரையிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நேபாளத்தில் நிலநடுக்கம்!
பக்கத்து மாநிலங்களான அசாமில் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த டிச.22, 23 ஆகிய இரு நாள்களில் 3.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததைத் தொடர்ந்து தற்போது இன்று மணிப்பூரில் 3.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
கடந்த அக்.28 முதல் நவ.30 ஆகிய காலத்திற்குள் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களில் 11 முறை நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.