15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
அமெரிக்க கார் தாக்குதலில் ஈடுபட்டவர் முன்னாள் ராணுவ வீரர்!
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினர் மீது காரை ஏற்றி 15 பேரைக் கொலை செய்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த படுபயங்கர தாக்குதலை நடத்துவதற்கு முன்பு, அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கார் ஏற்றி மக்களைக் கொலை செய்த நபர், அமெரிக்காவைச் சேர்ந்த 42 வயது சம்சுத்-தின் ஜப்பர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் டெக்ஸாஸ் மாகாணத்தில் நில விற்பனை தரகராக செயல்பட்டு வந்ததாகவும் சில ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்ததும், நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சம்சுத், மனைவியை விவாகரத்து செய்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அவர் வெளியிட்ட விடியோவில், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இதுபோன்ற தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
நியூ ஆர்லியன்ஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற பர்பன் வீதியில் புத்தாண்டையொட்டி ஏராளமானவர்கள் புதன்கிழமை குழுமியிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதிக்கு பிக்-அப் வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த அதை, அங்கிருந்த கூட்டத்துக்குள் வேகமாக இயக்கியதில், 15 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபர், காரிலிருந்து இறங்கி, அங்கிருந்த காவல்துறையினரை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினார். காவல்துறையினர் பதில் தாக்குதல் நடத்தி குற்றவாளியை சுட்டுக்கொன்றனர்.