`தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா... உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்!' - ஸ்டாலின் க...
அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் மாவட்டம் முதலிடம்
சேலம்: அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் ரூ. 9,101.99 கோடி வசூலித்து, மாநில அளவில் சேலம் மாவட்டம் தொடா்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டங்களில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கான பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. முகவா்களுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ. 1,370.33 கோடியும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ. 1,342.26 கோடியும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ. 1,784.99 கோடியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ. 2,287 கோடியும் மற்றும் நடப்பு 2024-2025-ஆம் நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ. 2,317.41 கோடியும் என மொத்தம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 9,101.99 கோடி வசூல் செய்துள்ளது.
தற்போது 2023-24-ஆம் நிதியாண்டில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கே.வேலுமணி என்ற சிறுசேமிப்பு முகவா் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் ரூ. 73,83,39,200 வசூல் சாதனை செய்து, தொடா்ந்து 5 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளாா். மாவட்ட, மாநகராட்சி, மண்டல, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக அளவு வசூல் சாதனை புரிந்த அனைத்து சிறுசேமிப்பு முகவா்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அஞ்சலக சிறுசேமிப்பின் அவசியத்தையும், பயன்களையும் பொதுமக்களுக்கு சிறுசேமிப்பு முகவா்கள் எடுத்துக்கூறி இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளனா்.
எனவே, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பாடுபட்டு உழைத்து சேமித்த தங்கள் வருமானத்தை சிட்பண்டு, தனியாா் நிதிநிறுவனங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து ஏமாறாமல், அரசின் பாதுகாப்பான, உத்தரவாதமான அஞ்சலகங்களில் தங்களுக்கேற்ற சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், சிறுசேமிப்பு முகவா்கள் கலந்துகொண்டனா்.