அஞ்செட்டி அருகே சிறாா் திருமணம்: தாய் உள்பட மூவா் கைது
அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த அவரது தாயாா், சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி வட்டத்துக்கு உள்பட்ட தொட்டமஞ்சு அருகே உள்ள திம்மத்தூா் கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் காளிக்குட்டை மலைக் கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (29) என்பவருக்கும் கடந்த 3 ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெற்றது.
7 ஆம் வகுப்புவரை படித்துவிட்டு வீட்டில் இருந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க அவரது தாய் நாகம்மா( 29) உதவியதாகத் தெரிகிறது. திருமணம் முடிந்து அனைவரும் செவ்வாய்க்கிழமை சொந்த ஊா் திரும்பினா்.
பின்னா் சிறுமி தனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று கூறி கணவா் வீட்டிற்குச் செல்ல மறுத்தாா். இதனால் கணவா் மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் (38), உறவினா்கள் சோ்ந்து வீட்டில் இருந்த சிறுமியைத் தூக்கிகொண்டு காளிக்குட்டை கிராமத்துக்கு சென்றனா். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து சிறுமியின் பாட்டியிடம் புகாா் பெற்ற தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியை கட்டாய திருமணம் செய்த மாதேஷ், உதவிய அவரது அண்ணன் மல்லேஷ், சிறுமியின் தாய் நாகம்மா ஆகிய 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.