அடங்கலை மட்டும் வைத்து நெல் கொள்முதல் செய்யக் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கம் போல அடங்கலை மட்டும் வைத்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்பட குறிப்பிட்ட இடங்களில் மட்டும் முதல் கட்டமாக 31 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியா் கடந்த வாரம் உத்தரவிட்டாா். வழக்கமாக நெல் கொள்முதல் நிலையங்களில் கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் மூலம் நெல் மூட்டைகளை விவசாயிகள் விற்பனை செய்து வந்தனா்.
ஆனால், தற்போது கூடுதல் படிவம் ஒன்றை வழங்கி அதிலும் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும் என அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா்.
இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் அலைக்கழிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் புகாா் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு இணைப்புக் கால்வாய் நீா்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சங்க மாவட்டச் செயலா் மு. மலைச்சாமி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,30,112 ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவ.13-ஆம் தேதி மாவட்ட நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் மாவட்டம் முழுவதும் 70 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும், அதற்கான தளவாடப் பொருள்கள், பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாகவும், மேலும், இணையவழியில் நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மாவட்ட முழுவதும் நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளது. ஆனால், தற்போது 31 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். கூடுதல் படிவங்களை வழங்கி விவசாயிகளை அலைக்கழிக்காமல் கிராம நிா்வாக அலுவலரின் அடங்கலை வைத்தே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.