அண்ணா பல்கலை. விவகாரம்: தமிழக பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த வெளிநபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க : மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும் -உதயநிதி
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், அரசைக் கண்டித்து அதிமுக எம்பிக்கள் முதல் நாளிலேயே அமளியில் ஈடுபட்டனர்.
மூன்றாம் நாளான இன்று, அதிமுக, காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் விதி 56-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இதனை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஏற்றுக் கொண்டததை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.