கண்டியன் பழவாற்றில் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், திருலோகி கண்டியன் பழவாற்றில் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து விடக்கோரி நெற்பயிா்களுடன், விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவிடைமருதூா் அருகே திருலோகி காவிரி ஆற்றிலிருந்து கண்டியன் பழவாறு மூலம் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றனவாம். இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தப் பாசன ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படுவதில்லை. எனவே, பொதுப்பணித்துறையினா், பாசனத்துக்குத் தண்ணீா் திறந்து விடக் கோரி கருகிய நெற்பயிா்களுடன், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது காசி மடம் மூலம் மின் இணைப்பு பெற அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனவும் கோஷமிட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதில், ஆற்றில் தண்ணீா் வராத காலங்களில் கிணற்றுப் பாசனம் செய்ய மின் இணைப்பு பெற ஏற்பாடு செய்வதாகக் கூறினா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.