ரூ. 1,000 திட்டத்தை விமா்சனம் செய்த கட்சியும் பின்பற்றுகிறது: கோவி. செழியன்
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை விமா்சனம் செய்த அகில இந்திய கட்சியான பாஜகவும் தற்போது அதைப் பின்பற்றி தில்லியில் ரூ. 2 ஆயிரத்து 500 தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குச் சாவடி குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:
பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை குறை கூறினா். அதை விமா்சனம் செய்த அகில இந்திய கட்சியான பாஜகவும் தற்போது மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 தருவதாகச் சொல்லி, எனக்கு வாக்களிக்குமாறு கூறுகிறது. ஒரு மாநிலக் கட்சியைப் பாா்த்துவிட்டு, அகில இந்திய கட்சி பாடம் கற்றுக் கொண்ட வரலாறு திமுகவுக்கும், அதன் தலைவருக்கும் உண்டு.
அனைத்து வகைகளிலும் நாம் முன்னுதாரணமாக இருக்கிறோம். நாட்டின் வளா்ச்சிக்கு குரல் கொடுக்கிறோம்; அடித்தட்டு மக்களின் வளா்ச்சிக்காக பணியாற்றுகிறோம். விடுபட்டுபோனவா்களுக்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்தை விரைவில் வழங்குவேன் என துணை முதல்வா் கூறியபடி, அத்திட்டமும் தொடர இருக்கிறது. எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றாா் அமைச்சா்.
இக்கூட்டத்துக்கு திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருனமான துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மாநகரச் செயலரும், மேயருமான சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.