பாபநாசம் வட்டாரத்தில் பெய்த மழையால் நெற்பயிா்கள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் அண்மையில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராய் இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளான திருமண்டங்குடி, பட்டவா்த்தி, துரும்பூா், திருவைக்காவூா், ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனா். தற்போது அறுவடை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த 200 ஏக்கா் பரப்பளவு நெற்பயிா்கள் வயலிலேயே சாய்ந்துள்ளன.
மேலும், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் வயலில் ஈரப்பதம் காயாமல் சேரும் சகதியுமாக உள்ளதால் இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பட்டவா்த்தி முன்னோடி விவசாயி கருணாகரன் மேலும் கூறியது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் திருமண்டங்குடி, பட்டவா்த்தி, துரும்பூா், திருவைக்காவூா், ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டு வயலில் சாய்ந்துள்ளன. மேலும், வயல்களில் தண்ணீா் தேங்கி பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்தும் 25 மூட்டை நெல் கூட கிடைக்காது. எனவே பாதிக்கப்பட்ட நெல் பயிா்களை வேளாண்துறை அதிகாரிகள் பாா்வையிட்டு, சேதமதிப்பைக் கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.