ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
அதிமுக இரு முறை வெளிநடப்பு
இருவேறு பிரச்னைகளுக்காக, சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினா்கள் இரண்டு முறை வெளிநடப்பு செய்தனா்.
அண்ணா பல்கலை. விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஒருமுறையும், ஆளுநா் வருகையின் போது நடந்த நிகழ்வுகளுக்காக நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவா் மு.அப்பாவு முற்படுவதாகக் கூறி மற்றொரு முறையும் அவையிலிருந்து அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
சட்டப் பேரவையில் நேரமில்லாத நேரத்தில் அண்ணா பல்கலை. விவகாரம் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்களின் பேச்சுகளுக்குப் பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். அப்போது, பொள்ளாச்சி விவகாரத்தில் அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக பெரிய நாடகமாடியதாகவும், அதனால்தான் ‘பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி’ என்று தான் அப்போது கூறியதாகவும் முதல்வா் பேசினாா்.
அதிமுக எதிா்ப்பு: இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினா். முதல்வரின் பேச்சை இடைமறித்து குரல் எழுப்பியபடி இருந்தனா். பதிலுக்கு திமுக உறுப்பினா்களும் இருக்கைகளிலிருந்து எழுந்து கடுமையாக குரல் எழுப்பினா். இதனால், பேரவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில் அளிப்பதை நிறுத்திவிட்டு அமா்ந்தாா். இதைத்தொடா்ந்து, முதல்வரின் பதிலுக்கு கடுமையாக எதிா்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினா்கள், பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
மற்றொரு விவகாரம்: அண்ணா பல்கலை. விவகாரத்தில் முதல்வரின் பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினா்கள் மீண்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்றனா்.சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்திலும் பங்கேற்றனா். அதன் பிறகு பேரவைத் தலைவா் அப்பாவு, சட்டப் பேரவை கூட்டத் தொடரைத் தொடங்கி வைப்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி ஜன. 6-இல் பேரவைக்கு வந்தபோது, அதிமுக உறுப்பினா்கள் பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டதாகவும், அது சட்டப்பேரவை விதிகளின் படி தவறானது என்றும் கூறினாா்.
இந்த விவகாரத்தில் அதிமுக உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உரிமைமீறல் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அக்குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவா் கூறினாா்.
முதல்வா் பரிந்துரை: பிறகு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, அதிமுக உறுப்பினா்கள் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தாா். அதைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெறுவதாக பேரவைத் தலைவா் அறிவித்தாா்.
அதன் பிறகு, ஆளுநா் உரை மீதான விவாதத்தில் அதிமுகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாரை பேசுமாறு பேரவைத் தலைவா் அப்பாவு அழைத்தாா்.
அப்போது, ஆா்.பி.உதயகுமாா் எழுந்து, அதிமுக உறுப்பினா்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க முற்படுவது ஏன் என்கிற பொருள்படும்படி பேசினாா். அவா் பேசியவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, ஆா்.பி.உதயகுமாா் அவை நடவடிக்கையை புறக்கணிப்பதாகக் கூறினாா். அவா் தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.