`காயிதேமில்லத் சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பாஜக நேர்வழியில் நடந்திருக்கும்!' - ...
``அதிமுக பற்றி ஒரு வரி கூட விஜய் பேசவில்லை; திமுக குறித்தே பேசுகிறார்'' - எம்.எல்.ஏ செந்தில்குமார்
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்
ஓரணியில் தமிழ்நாடு முப்பெரும் விழா தொடர்பாக திண்டுக்கல் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ. பி. செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போது,
"மிகப் பெரிய தலைவர்களை வென்றுள்ள இயக்கம் திமுக. எங்களைப் பார்த்துதான் மற்றவர்கள் அஞ்ச வேண்டும். அதிமுகவைப் பற்றி ஒரு வரியும் கூட விஜய் பேசவில்லை.
மோடியைப் பற்றி பாசாங்காக பேசியிருக்கிறார். ஆனால் திமுக குறித்தும், முதல்வர் குறித்தும் மட்டுமே பேசிக் கொண்டே இருக்கிறார்.
505 வாக்குறுதிகள் கொடுத்தோம். இதில் 70 முதல் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. எனவே, விஜய் கவலைப்பட வேண்டாம். தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் 2வது முறை ஆட்சிக்கு வந்து சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். அதை விஜய் பார்ப்பார்."

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி
தமிழ்நாட்டின் பொருளாதார சூழ்நிலை குறித்து விஜய்க்கு தெரியுமா? 2011 முதல் 2021 வரை ஆட்சி செய்த அதிமுக, குறிப்பாக ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கஜானாவை மொத்தமாகச் சுரண்டி காலி செய்து வைத்திருந்தனர்.
மின்சார வாரியத்தில் ₹1.5 லட்சம் கோடி கடன் உள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தில் விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைமைக்குத் தமிழக அரசு உள்ளது. இந்த சூழ்நிலையில்தான் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைத் தமிழ்நாடு தொட்டுள்ளது.

கல்வி, மருத்துவத்தில் முக்கியத்துவம் செலுத்துவேன் என்கிறார் விஜய். அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த பள்ளி கட்டிடங்களை ரூ.7000 கோடி செலவிட்டு புதிய பள்ளி கட்டிடங்களாகக் கட்டியுள்ளோம். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
‘மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்’ கீழ் தமிழ்நாட்டில் 2.24 கோடி நபர்களுக்கு சுகாதாரத்துறை நேரடியாக வீடு தேடி சென்று மருத்துவச் சிகிச்சை அளித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டுள்ளது.
மடிக்கணினி, குடிமராமத்துப் பணிகள்
மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் குடிமராமத்துப் பணிகள் நிறுத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர்,
“குறிப்பிட்ட பகுதிகளில் குடிமராமத்துப் பணிகளால் மக்கள் பயனடைந்துள்ளனர்; அதனை மறுக்கவில்லை. ஆனால் சில இடங்களில் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் திட்டம் மக்களைச் சென்றடையவில்லை. 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் தயாராகி வருகின்றன; இவ்வருடம் வழங்கப்படும்,” என்றார்.

எல்லா அரசுகளும் கடன்களை வாங்கும்; ஆனால் அந்தக் கடனை முறையாகச் செலுத்த வேண்டும். மஞ்சள் நோட்டீஸ் வழங்கும் நிலைக்குத்தான் தமிழ்நாட்டை விட்டுச் சென்றது அதிமுக. திமுக அரசு வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தி வருகிறது.
வரி உயர்வுக்குக் காரணம் அதிமுகவே; அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ‘உதய் மின் திட்டம்’ மீது அதிமுக கையெழுத்துப் போட்டதே மின்சாரக் கட்டண உயர்வுக்கு காரணம்.
பரிசீலித்து கருத்து சொல்வதற்கான இடத்தில் மட்டுமே தமிழ்நாடு அரசு இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் அதிக பணிச்சுமை இருப்பதாக வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் கூறியதாவது:

"அனைத்து முகாம்களிலும் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. காரணம், ஒவ்வொரு முகாமிலும் சுமார் 1200 மனுக்கள் வருகின்றன. அவற்றைப் பரிசீலித்து அரசுக்கு அனுப்ப வேண்டும். சுமை இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
அரசு அலுவலர்களாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருக்கக்கூடிய முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி - இந்தச் சுமையைச் சுகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால், அது மக்களுக்காக." என்றார்.