குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? ...
"அது நமாஸ் அல்ல ஷஷாங்காசனம்"- யோகா கற்றுத் தந்த இஸ்லாமிய ஆசிரியருக்கு எதிராக இந்து அமைப்பு போராட்டம்
மத்திய பிரதேச மாநிலம் பர்ஹன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாபூர் அருகில் இருக்கும் தியோஹரி என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ஜபூர் தட்வி.
இப்பள்ளி மாணவர்கள் தீபாவளி விடுமுறையில் யோகா என்ற பெயரில் நமாஸ் செய்வது போன்று செய்தனர். இதனை மாணவர்கள் நமாஸ் செய்வதாகப் புரிந்து கொண்ட பெற்றோர் சிலர் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் இது குறித்து கல்வித்துறை அதிகாரிக்குத் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் மாவட்ட கல்வித்துறை சார்பாக இது குறித்து விசாரிக்க தனிக்கமிட்டி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் அக்கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் முஸ்லிம் ஆசிரியர் யோகா மற்றும் சூரிய நமஸ்காரம் என்ற பெயரில் மாணவர்களுக்கு நமாஸ் செய்ய கற்றுக்கொடுத்து மாணவர்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாகக் கூறி போராட்டம் நடத்தினர்.
அதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதோடு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக மாவட்ட கூடுதல் கலெக்டர் வீர் சிங் தெரிவித்துள்ளார்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை ஆசிரியர் ஜபூர் தட்வி மறுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவர்களுக்கு யோகா கற்பிக்க அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட ஆசனம் ஷஷாங்காசனத்தின் காரணமாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது பார்வைக்கு நமாஸ் தோரணைகளில் ஒன்றை ஒத்திருக்கிறது. குழந்தைகள் வெறுமனே யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் போஸ் தொழுகை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. என் தரப்பு வாதத்தைக் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்தது அநியாயம்" என்று தட்வி எழுதினார். சமூக ஆர்வலர்கள் பலரும் தட்விக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.






















