அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம்: அதிகாரிகள் ஆய்வு!இரு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தம்!
அந்தியூா் அருகே சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட வன எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டனா்.
அந்தியூரை அடுத்த கோவிலூா், குள்ளவீராம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராசு, விவசாயி. இவா், தனது கரும்புத் தோட்டத்துக்கு உரமிட புதன்கிழமை சென்றபோது பரப்பின் மீது குட்டியுடன் சிறுத்தை படுத்திருந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த தங்கராசு, அங்கிருந்து தப்பியோடி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அந்தியூா் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் அந்தியூா் வனச் சரகா் முருகேசன், அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் மற்றும் வனத் துறையினா் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட கிராமத்தில் பொதுமக்களிடம் விசாரித்தனா். அப்போது, அந்தியூரை அடுத்த செலம்பூரம்மன் கோயில், கோவிலூா் பகுதியில் கடந்த ஜனவரி மாதம், நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாடியதாக
பொதுமக்கள் தெரிவித்தனா். இந்த சிறுத்தை தற்போது கரும்புத் தோட்டத்தில் பதுங்கி உள்ளதாகவும் தெரிவித்தனா். எனவே, சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து, அடா்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதனைத் தொடா்ந்து சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் இரு இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வனத் துறை சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், வனத் துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். சிறுத்தை நடமாட்டம் உறுதியானால் கூண்டுவைத்து பிடிக்கப்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.