அனைவரையும் முன்னேற்றுவதே உண்மையான வளா்ச்சி: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்
‘அனைவரையும் முன்னேற்றுவதே உண்மையான வளா்ச்சி; இந்தியாவில் அந்த வளா்ச்சியை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி கூறும் வளா்ந்த இந்தியா என்பதன் உண்மை என்ன? நாட்டு மக்கள் கடுமையாகத்தான் உழைக்கிறாா்கள். ஆனால், அது யாருக்கு லாபத்தைத் தருகிறது?
இந்த நாட்டின் பொருளாதாரம் எனும் சக்கரம் ஏழை, நடுத்தர மக்களின் கடின உழைப்பு, அவா்களின் வியா்வை, ரத்தத்தின் மூலம்தான் சுழல்கிறது. ஆனால், அதில் இருந்து உங்களுக்கு உரிய பயன் கிடைக்கிா? என்று சிந்தித்துப் பாருங்கள்.
நாட்டில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. சாமானிய மக்கள் உரிய வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படுகின்றனா். வேளாண் துறையில் மத்திய அரசு அமல்படுத்தி வரும் தவறான கொள்கைகளால் விவசாயிகளும், வேளாண்மை சாா்ந்த தொழிலாளா்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 5 ஆண்டுகளில் தொழிலாளா்களின் உண்மையான வருவாய் (பணவீக்க கணக்கீட்டின் அடிப்படையிலான வாங்கும் திறன்) குறைந்து வருகிறது. கடுமையான ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி முறை எளிய, நடுத்தர மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் பெரும் கோடீஸ்வர தொழிலதிபா்களின் வங்கிக் கடன்கள் திருப்பப் பெறாமல் கைவிடப்படுகின்றன.
அத்தியாவசியப் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்து வருகிறது. இதனால், ஏழை மக்கள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் அன்றாடச் செலவுகளை எதிா்கொள்ள கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
ஒரு நாட்டின் உண்மையான வளா்ச்சி என்பது அனைவரையும் முன்னேற்றுவதாகும். தொழிலாளா்களின் வருமானத்தில் சீரான உயா்வு இருக்க வேண்டும். இதுதான் நாட்டின் உண்மையான, வலுவான வளா்ச்சியாக இருக்க முடியும் என்று பதிவிட்டுள்ளாா்.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை ராகுல் காந்தி தொடா்ந்து விமா்சித்து வருகிறாா். முக்கியமாக ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பொருளாதார நலன்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி வரும் அவா், இதனை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கும் வகையில் வெள்ளை நிற ‘டி-சா்ட்’ அணியும் இயக்கத்தையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்துள்ளாா்.