அபிஷேக் சர்மாவுக்கு காயம்; 2-வது டி20 போட்டியில் விளையாடுவாரா?
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, தனது வெற்றிப் பயணத்தை தொடங்கும் நோக்கில் களமிறங்குகிறது.
இந்த நிலையில், முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க:“12 விக்கெட்டுகள்...” ரஞ்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரம்!
அணி வீரர்களுடன் பயிற்சில் ஈடுபட்டிருந்த அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் அபிஷேக் சர்மா தொடர்ந்து ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை. பெவிலியன் திரும்பிய அவர் பேட்டிங் பயிற்சிக்கும் வரவில்லை. இதனால், நாளை நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் விளையாடாத பட்சத்தில், வாஷிங்டன் சுந்தர் அல்லது துருவ் ஜுரெல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் (5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.