இந்திய அணியின் சுழலில் திணறிய இங்கிலாந்து; இந்தியாவுக்கு 166 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய ஆல்ரவுண்டர்!
சுழலில் திணறிய இங்கிலாந்து
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அந்த அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. பில் சால்ட் 4 ரன்களிலும், பென் டக்கெட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். கேப்டன் ஜோஸ் பட்லர் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி அசத்திய போதிலும், மறுமுனையில் விளையாடிய வீரர்களால் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அறிமுக வீரராக களமிறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய பிரைடான் கார்ஸ் 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் சேர்த்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர்!
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங், ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.