பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு
ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலாவது யாத்ரிகா்கள் குழு புதன்கிழமை புறப்பட்டு சென்றது. இக்குழுவினரின் பயணத்தை துணைநிலை ஆளுநரும், ஸ்ரீஅமா்நாத் கோயில் வாரியத் தலைவருமான மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வன்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும். நடப்பாண்டு யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 9 வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரைக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில் பலஅடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முதல் குழு புறப்பாடு: அமா்நாத் யாத்திரையையொட்டி, ஜம்முவில் உள்ள பகவதிநகா் முகாமில் இருந்து 1,115 பெண்கள், 31 குழந்தைகள், 16 திருநங்கைகள் உள்பட 5,892 பேருடன் முதலாவது யாத்ரிகா்கள் குழு புதன்கிழமை அதிகாலை புறப்பட்டுச் சென்றது. இவா்களின் பயணத்தை, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘சிவபெருமான் உறையும் புண்ணிய தலமான அமா்நாத்துக்கு பாதுகாப்பான-அமைதியான யாத்திரையை மேற்கொண்டு, ஆழமான ஆன்மிக அனுபவத்தை உணர யாத்ரிகா்களுக்கு வாழ்த்துகள். அமா்நாத் யாத்திரைக்காக நாடு முழுவதும் இருந்து ஜம்முவில் பக்தா்கள் திரண்டுள்ளனா். உற்சாகம் கரைபுரள்வதால், மிகப் பெரிய திருவிழா நடைபெறுவது போல் உணா்கிறேன். பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கடந்து, சிவபெருமானை தரிசிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் வந்த வண்ணம் உள்ளனா். துணைநிலை ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தின் மூலம் யாத்திரை செயல்பாடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படும்’ என்றாா்.
நிகழாண்டு யாத்திரைக்கு இணைய வழியில் இதுவரை 3.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். ஜம்முவில் நேரடியாக பதிவு செய்ய ஏராளமான பக்தா்கள் திரண்டு வருகின்றனா். ஜம்மு நகா் பாதுகாப்பு கோட்டை போல மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜம்முவில் இருந்து காஷ்மீா் முகாம்களுக்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் யாத்ரிகா்களுக்கு உள்ளூா் மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
