ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
101 வயதான அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23-ஆம் தேதி மூச்சுத் திணறலும் மாரடைப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூத்த தலைவர் அச்சுதானந்தனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் உள்ளதே தவிர அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர். வயது முதிர்வால் அச்சுதானந்தனின் உடல் மருத்துவச் சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
ஏற்கெனவே அவரது சிறுநீரக செயல்பாடு மோசமாகியுள்ளதாகவும், ரத்த அழுத்தமும் சீராக இல்லையென்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் வாதிட்ட அச்சுதானந்தன், 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணியாற்றினார்.
கேரள அரசியலில் உயர்ந்த நபரான அச்சுதானந்தன், சமீபத்திய ஆண்டுகளில் உடல்நலப் பிரச்னைகளுடன் போராடி வருவதால் பொது வாழ்க்கையிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.