அமெரிக்க இறக்குமதிக்கு 25% வரி: சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பா அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்புக்கு போட்டியாக ஐரோப்பிய ஒன்றியமும் வரி உயர்வை அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு 20% வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், இந்த வரி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னதாக சீன இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவுக்கு போட்டியாக, அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு அறிவித்திருந்தது.
பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கிய நாடுகள் மாறிமாறி வரி உயர்வை அறிவித்து வருவதால், சந்தை முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருந்தது. ஆனால், இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மதுபானங்களுக்கான வரியை உயர்த்தினால், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
இதனிடையே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் தவிர்த்து மற்ற சில பொருள்களுக்கான வரியை 25 சதவிகிதமாக உயர்த்த ஐரோப்பா முடிவு செய்துள்ளது.
இதன்படி, கோழி, அரிசி, சோளம், உலர் திராட்சை, பருப்புகள், மோட்டார் சைக்கிள், பிளாஸ்டிக், ஆடைகள், வண்ணப்பூச்சுகள், மின்னணு பொருள்கள் போன்றவற்றுக்கு இந்த வரி பொருந்தும் என அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதியில் இருந்து இந்த வரி அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக கூடிய விரைவில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறக்குமதி வரி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு எந்தெந்தப் பொருள்களுக்கு வரி விதிப்பது, எவ்வளவு வரி விதிப்பது என்பவை இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | மருந்துப் பொருள்களுக்கு விரைவில் வரி உயர்வு: டிரம்ப்