அமைச்சர்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு மறுப்பு: அதிமுக அமளி, வெளிநடப்பு!
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி அளிக்கப்படாததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அமலாக்கத்துறை சோதனைக்குள்ளான அமைச்சர் கே.என்.நேரு, டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பெண்களுக்கு எதிராக பேசிய அமைச்சர் பொன்முடி ஆகியோருக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக உறுப்பினர்கள் அளித்தனர்.
ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தீர்மானத்தை நிராகரித்ததால், அவரை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
மேலும், தமிழக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதனிடையே, அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மட்டும் வெளிநடப்பு செய்யாமல் சட்டப்பேரவையிலேயே இருக்கிறார்.