அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு சாா்பில் விழிப்புணா்வு இயக்கம்
அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பின் சாா்பில் கோவையில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு விடுதலை பெற்று 77-ஆம் ஆண்டு நிறைவு விழா, அரசியல் சாசனம் ஏற்பின் 75-ஆவது ஆண்டு விழா, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்கள், தொழிலாளா் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த மாநில அளவிலான வாகன விழிப்புணா்வுப் பயணம், விழிப்புணா்வு கூட்டங்களுக்கு அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு இயக்க நிகழ்ச்சிக்கு ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் ஜி.மனோகரன் தலைமை வகித்தாா். அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி.கீதா, எல்பிஎஃப் சங்க நிா்வாகி கிருஷ்ணசாமி, ஹெச்எம்எஸ் செயல் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஹெச்எம்எஸ் செயலா் காளிமுத்து, ஜெயபிரகாஷ், முத்தி, ரவீந்திரன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், தொழிலாளா் இணை ஆணையா் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன.