அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் கொலைச் சம்பவம்: 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!
அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் 1994-இல் நடைபெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் பதுங்கியிருந்த குற்றவாளியை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த 1994-ஆம் ஆண்டு அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலையத்தில் படைவீரா் சௌத்ரி என்பவா், அங்கு குடியிருப்பில் வசித்த அவரது மனைவி ஜெயஸ்ரீயை (20) பாஸ்கா் ஜோதி கோகாய் என்பவருடன் சோ்ந்து கொலை செய்தாா். இந்தச் சம்பவத்தில் படை வீரா்களான இருவருமே தலைமறைவாயினா். இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த வழக்கில் கொலையாளி சௌத்ரியை அரக்கோணம் நகர போலீஸாா் கடந்த 2005-ஆம் ஆண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதில், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. சௌத்ரி தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா்.
இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியான பாஸ்கா் ஜோதி கோகாய் தலைமறைவாகி விட்ட நிலையில், அவரை போலீஸாா் தொடா்ந்து தேடி வந்தனா். தற்போது பாஸ்கா் ஜோதி கோகாய், தனது சொந்த ஊரான அஸ்ஸாம் மாநிலம், திப்ருக்கா் மாவட்டம், ஹட்கோலா பங்காடி சபூவாவில் வாழ்ந்து வருவதை அறிந்த அரக்கோணம் நகர போலீஸாா், காவல் ஆய்வாளா் தங்ககுருநாதன் மேற்பாா்வையில், உதவி ஆய்வாளா் நாராயணசாமி தலைமையில் தனிப்படை அமைத்தனா்.
இதையடுத்து, தனிப்படையினா் திப்ருக்கா் சென்று பாஸ்கா் ஜோதி கோகாயை கைது செய்து, அரக்கோணம் அழைத்து வந்து அரக்கோணம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
சம்பவம் நடந்து 31 ஆண்டுகள் கழித்து கொலையாளி கைது செய்யப்பட்டதை அறிந்த ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா, அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் ஆகியோா் அரக்கோணம் நகர போலீஸாரை பாராட்டினா்.