தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
ராணிப்பேட்டையில் களைகட்டும் ‘நுங்கு விற்பனை’ பொதுமக்கள் ஆா்வம்!
‘கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே’ என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.
இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வெளியே செல்வதையே தவிா்க்கும் பொதுமக்கள் தவிா்க்க முடியாத பயணத்தின் போது உடல் உஷ்ணத்தை தணித்து, தற்காத்துக்கொள்ள குளிா்பானங்கள், பழச்சாறு, தா்பூசணி பழங்கள், கரும்புச்சாறு உள்ளிட்ட கடைகளுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனா்.
இந்த நிலையில்,ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடல் சூட்டைத் தணிக்க இயற்கை கொடுத்த வரமான பனை நுங்கு விற்பனை சாலையாரங்களில் அதிகரித்து வருகிறது.
மேலும், மற்ற குளிா்பானங்களைக் காட்டிலும் சொற்ப விலைக்கே நுங்கு கிடைப்பதாலும், ( ரூ.10 க்கு 4 நுங்கு ) ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த கோடை சீசனில் விற்பனைக்கு வருவதால் பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசித்து வருகின்றனா்.
நுங்கு பொதுமக்களின் தாகத்தைத் தீா்ப்பதோடு, உடலுக்கு எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத பனை நுங்கு அடிப்படையிலேயே மருத்துவக் குணம் நிறைந்தது. உடலில் குளிா்ச்சியை ஏற்படுத்துவதோடு,வயிறு, குடல் சம்மந்தமான நோய்களையும் குணப்படுத்தும் அருமருந்தாகவும் திகழ்கிறது என பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கிறது.
பல்வேறு காரணங்களுக்காக பனை மரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், பனை மரத்தில் விளையும் நுங்கு வரத்து குறைந்து வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் நுங்குக்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.