'அரசியலமைப்பை ஒழித்துக்கட்டுவதே பாஜகவினரின் ஒரே வேலை' - ராகுல் காந்தி பேட்டி
பாஜகவினர் அம்பேத்கருக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள் விவாதத்தின் முடிவில், நேற்று(செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.
இந்தநிலையில், அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியதாகக் கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி இன்று போராட்டம் நடத்தினர். இதனால் இன்று அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதையும் படிக்க | டாடா இரும்புச் சுரங்கத்தில் 'பெண்கள் ஷிஃப்ட்'! இந்தியாவில் முதல்முறை!!
மேலும், அமித் ஷா பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
'அமித் ஷா பேசியது அரசியலமைப்புக்கு எதிரானது. அரசியலமைப்பை மாற்றுவோம் என பாஜகவினர் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகின்றனர். அவர்கள்(பாஜக) அம்பேத்கருக்கும் அவரது கொள்கைகளுக்கும் எதிரானவர்கள். அரசியலமைப்பையும் அம்பேத்கர் செய்த பணியையும் ஒழித்துக்கட்டுவதே அவர்களின் ஒரே வேலை' என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும்! - கார்கே