பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது; தகவல் கூறியவர்களையும் கெளரவிக்க கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வருபவர் ஜாபர் அலி. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி கனமழை மற்றும் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் அன்றிரவு 8.30 மணிக்கு 957 பயணிகளுடன் புறப்பட்டது. ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்த தாதன்குளம் அருகே கனமழையால் அரிப்பு ஏற்பட்டு தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த சரளைக் கற்கள் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிய படி நின்றது.
இந்த தகவலை தாதன்குளம் கேட் கீப்பர்களான அரசர்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணபெருமாள், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் தண்டவாள பராமரிப்பாளர் செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்தைச் சேர்ந்த செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய மூவரும் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு கூறினர். உடனே துரிதமாகச் செயல்பட்ட மாஸ்டர் ஜாபர் அலி, ரயிலை எச்சரித்து நிறுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் 957 பயணிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இச்செயலுக்காக மத்திய அரசின் ரயில்வே துறை வழங்கும் 2024-ம் ஆண்டுக்கான ’அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ விருது ரயில் நிலைய மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்த விருதினை வழங்குகிறார்.
இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தின் போது தாதன்குளம் பகுதியில் தண்டவாளத்தை தாண்டி வெள்ள நீர் செல்வதை கண்டும், தண்டவாளம் உடைந்த தகவலை ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கூறியது கேட் கீப்பர்கள் கிருஷ்ணபெருமாள், செல்வகுமார் மற்றும் தண்டவாளப் பராமரிப்பாளர் விக்னேஷ் ஆகிய மூவரும்தான். எனவேதான் ஸ்டேஷன் மாஸ்டருக்கு விருது வழங்கப்பட்டதைப்போல செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட தகவல் கூறிய ரயில்வே ஊழியர்கள் மூவரையும் ரயில்வே நிர்வாகம் கெளரவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.