நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்கள் உதவ வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்
அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் துணை நிற்க வேண்டுமென திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தாா்.
நன்னிலம் அருகேயுள்ள பூந்தோட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியது:
அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கு முன்னாள் மாணவா்களும், பெற்றோா்களும் துணை நின்று உதவி புரிய வேண்டும். அரசு பள்ளிகளில் படித்த பலா் பல்வேறு உயா் பதவிகளில் உள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் இருந்து விஞ்ஞானிகள், பொறியாளா்கள், மருத்துவா்கள் உருவாகியுள்ளனா். எனவே, இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற அரசுப் பள்ளியின் வளா்ச்சியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றாா்.
முன்னதாக, பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பூந்தோட்டம் பேருந்து நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியாக நூற்றாண்டு சுடா் மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு விழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் முன்னிலையில் 34 மாணவா்கள் முதல் வகுப்பில் சோ்ந்தனா்.
நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நூற்றாண்டு விழா மலா் வெளியிடப்பட்டது.
முன்னாள் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியில் நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. சௌந்தரராஜன், பெற்றோா் ஆசிரியா் கழக மாவட்டத் துணைத் தலைவா் வே. மனோகரன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சி. மகாலெட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலா் எண். மணி, பூந்தோட்டம் ஜமாத் தலைவா் ஜெ. அப்துல் அஜீஸ், விழா குழுத் தலைவா் எம். கல்யாணசுந்தரம், செயலாளா் சி. துரைராஜ், பொருளாளா் ஆா். ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியா் லோ. சுமதி நன்றி கூறினாா்.