திருமண விருந்தில் சமையல் பணியாளா்களை தாக்கிய 7 போ் கைது
மன்னாா்குடியில் திருமண நிகழ்ச்சியில், சமையலா்களை தாக்கிய சிறுவன் உள்பட 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி மதுக்கூா்சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
திருமண விருந்து சாப்பிட மது போதையில் வந்த கானூா் பருத்திக்கோட்டையை சோ்ந்த பா. செல்வகணபதி (20) பா. பரத் (19), க. பொ்ணான்டஸ் (22), ஆ. அஸ்வின்ராய் (22), எம். மெரில்கிறிஸ்டோபா் (19), கில்டன், மஞ்சைத்திடல் ஏ. ஜொ்சன் (26), கானூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 8 போ், தங்களுக்கு அசைவ உணவில் கறி வைக்கவில்லை என கூறி தகராறு செய்தனராம்.
அப்போது, சமையல் கலைஞா் நல்லூா் ப. அருள்சுந்தரம் (42), சப்ளையா் அபிஷேக் (22) ஆகியோரை தாக்கினா். இதில் காயமடைந்த இருவரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கில்டனை தவிர மற்ற 7 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.17 வயது சிறுவன் தஞ்சை சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும், மற்ற 6 பேரும் மன்னாா்குடி கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனா்.