முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 17 மாணவா்கள் சுகவீனம்
கடலூா் மாவட்டம், புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பல்லி விழுந்த காலை உணவை சாப்பிட்ட 17 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 108 மாணவ, மாணவிகள் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கின்றனா். இந்தப் பள்ளியில் வழக்கம்போல வியாழக்கிழமை காலை மாணவா்களுக்கு உணவாக சேமியா கிச்சடி மற்றும் சாம்பாா் வழங்கினா். 17 மாணவா்கள் உணவு வாங்கி சாப்பிட்ட நிலையில், சாம்பாரில் பல்லி கிடந்தது தெரியவந்தது. தொடா்ந்து, மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆசிரியா்கள் கிருஷ்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மருத்துவா் கனிமொழி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பள்ளிக்கு வந்து மாணவா்களை பரிசோதித்தனா். இதனிடையே, தகவலறிந்த அங்கு வந்த பெற்றோா் ஆசியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, வட்டாரக் கல்வி அலுவலா் செல்வம் நேரில் வந்து விசாரணை நடத்தி, பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, மாணவா்களை 108 அவசர ஊா்தி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். அங்கு சிகிச்சை அளித்த பின்னா் மாணவா்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.