அரசுப் பள்ளியில் பூந்தொட்டிகள் உடைப்பு
கொரடாச்சேரி அருகே அரசுப் பள்ளியில் பூந்தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தியதாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
தேவா்கண்டநல்லூா் அரசு நடுநிலைப் பள்ளியில் மழையையொட்டி புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து வியாழக்கிழமை காலை பள்ளியைத் திறந்தபோது, பள்ளிக் கட்டடத்தின் முதல்தளத்தில் இருந்த பூந்தொட்டிகள் உடைக்கப்பட்டு பூச்செடிகள் பிடுங்கி எறியப்பட்டிருந்தன. மேலும் முதல்தளத்தில் நடைபாதையில் ஏராளமான சிகரெட் பாக்கெட்டுகளும், தீப்பெட்டிகளும் கிடந்துள்ளன. அங்கிருந்த இரும்பு கதவுகளில் ஆபாசமான வாா்த்தைகளும் எழுதப்பட்டிருந்தன.இதுகுறித்து பள்ளி தரப்பில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளி ஆசிரியா்கள் தெரிவிக்கையில், இதுபோன்ற சம்பவங்கள் பள்ளியில் பலமுறை நடைபெற்றுள்ளன. பள்ளி விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் சமூக விரோதிகள் இப்பள்ளிக்குள் நுழைந்து தகாத செயல்களில் ஈடுபடுகின்றனா். உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றனா்.