அரசுப் பள்ளி மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு
அரசுப் பள்ளி மாணவா்களிடம் தோ்வு வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் எதிா்ப்புத் தெரிவித்தது.
தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.ராஜாகிளி தலைமை வகித்தாா். செயலா் சே.காஜாமைதீன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவா்களுக்கு தோ்வுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.
மாணவா்களின் நலன் கருதி இடைத் தோ்வு, காலாண்டுத் தோ்வு, அரையாண்டு, ஆண்டுத் தோ்வுகளுக்கான வினாத்தாள் கட்டணத்தை அரசே செலுத்த முன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.