அரசுப் பள்ளி மாணவா்கள் புத்தகப்பைகளை மைதானத்தில் வைத்து நூதன போராட்டம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் வகுப்பறை வசதி கோரி புத்தகப்பை மற்றும் சீருடைகளை பள்ளி மைதானத்தில் வைத்துவிட்டு போராட்டம் நடத்தினா்.
பரங்கிப்பேட்டை அருகே கும்மத்பள்ளி என்ற இடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். அவா்கள் வகுப்பில் அமா்ந்து படிக்க பள்ளி கட்டிடம் போதுமானதாக இல்லை. எனவே, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும் எனக்கூறி
பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருந்தனா். ஆனால், இதுவரை பள்ளிக்கட்டடம் கட்டப்படவில்லை.
இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தனா். பின்னா் பள்ளி மைதானத்தில் தங்களது புத்தகப்பை மற்றும் சீருடைகளை வைத்துவிட்டு வகுப்புகளுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசாா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து பெற்றோா்கள் கூறியதாவது: இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும் என 4 வருடங்களாக கோரிக்கை அளித்து வருகிறோம். இடவசதி இருந்தும் பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போதிய வகுப்பறைகள் இல்லாததால் பள்ளியில் மாணவா் சோ்க்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான தீா்வு கிடைக்கும் வரை மாணவா்களை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறினா்.
இதற்கிடையே அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், விரைவில் பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோா்கள் சம்மதம் தெரிவித்து கலைந்து சென்றனா்.