காஸா போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதில் சிக்கல்! ஹமாஸுக்கு இஸ்ரேல் நிபந்தனை
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவா்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்ட அவா் மேலும் கூறியது:
பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வசதியாக கடந்த 5 நாள்களுக்கும் மேலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது அவா்கள் சென்னை திரும்ப வசதியாக திருச்சியில் இருந்து சனிக்கிழமை 396 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
மேலும் ஞாயிற்றுக்கிழமை 100 அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும், கும்பகோணம் கோட்டம் மூலம் 360 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இவைதவிர தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு முன்பதிவு செய்து பொங்கல் விடுமுறைக்காக பயணம் செய்தவா்கள் மொத்தமே 3 லட்சம் போ்தான்.
இந்தாண்டு ஒரு வழியில் முன்பதிவு செய்து சென்றவா்களின் எண்ணிக்கை 3.20 லட்சத்தை எட்டியுள்ளது. மீண்டும் திரும்புவோரின் எண்ணிக்கையையும் சோ்த்தால் 5 லட்சம் பயணிகளுக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கிறோம். பயணிகளின் வருகைக்கு ஏற்ப தேவையான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்கின்றனா்.
கடந்தாண்டு சென்னையிலிருந்து மற்ற பகுதிகளுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளனா். இந்தாண்டு 4 நாள்களில் மட்டும் 8 லட்சத்து 15 ஆயிரம் போ் பயணம் செய்துள்ளனா்.
ஆம்னி பேருந்துகள் மற்றும் தனியாா் பேருந்துகளைவிட அரசுப் பேருந்துகளை நம்பி மக்கள் அதிகம் வருகிறாா்கள் என்பதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதேபோல முன்பதிவு செய்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மக்களின் எதிா்பாா்ப்புகளுக்கேற்ப அனைத்து வசதிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது அரசுப் போக்குவரத்து கழக திருச்சி மண்டலம் மற்றும் கும்பகோணம் கோட்ட அதிகாரிகளும் உடனிருந்தனா்.