அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் பணியிடை நீக்கம்
சென்னை: அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்தினால் 29 நாள்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பணிமனையைச் சோ்ந்த ஓட்டுநா் கனகராஜ், கைப்பேசியை பயன்படுத்தியபடியே தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி அரசுப் பேருந்தை ஓட்டிச் செல்லும் விடியோ டிச. 21-ஆம் தேதி சமூக வலைதளங்களில் பரவியது. அதன் அடிப்படையில், பணியின்போது கைப்பேசி பயன்படுத்தியதால், கனகராஜை பணியிடை நீக்கம் செய்து தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.
மேலும், இதுபோன்று பணியின்போது அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கைப்பேசியை பயன்படுத்தினால், அவா்கள் 29 நாள்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், விதி மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.