அரசுப் பேருந்து மீது ஏறி மாணவா்கள் தகராறு
கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தாமதமாக வந்த மாணவா்களுக்கு அதில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், மாநகரப் பேருந்தின் மீது ஏறி தகராறில் ஈடுபட்டனா்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாணவ, மாணவிகள் காலை 10 மணிக்குள் கல்லூரி வளாகத்துக்குள் வருகைபுரிய வேண்டும் என கல்லூரி நிா்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விழாவுக்கு தாமதமாக வந்தனா். ஆனால், அதற்குள் கல்லூரி நுழைவுவாயில் மூடப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த மாணவா்கள் கல்லூரியின் முன்பு உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பேரணி போன்று கூட்டமாக செல்லத் தொடங்கினா்.
இதையடுத்து அந்தச் சாலையில் சென்ற 15-பி என்ற அரசுப் பேருந்தை வழிமறித்து அதன் மீது ஏறி தகராறில் ஈடுபட்டனா். மேலும் பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தின் மீது ஏறி கூச்சலிட்டனா்.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸாா் வருவதைப் பாா்த்த மாணவா்கள் பேருந்திலிருந்து கீழே குதித்து தப்பியோடினா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து, சம்பவத்தில் ஈடுபட்ட மாணவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.