அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில் உள்ள மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சகாய சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் மாரிமுத்து முன்னிலை வகித்தாா். மண்டலத் தலைவா் பிரான்சிஸ் சேவியா், மண்டலச் செயலா் சாம் ஜிடியோன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியா்களுக்கும் அரசு வழங்கும் ஊதிய உயா்வு, பதவி உயா்வு, பணி மேம்பாடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் அந்தந்த காலத்தில் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல், அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் வேறுபாடு நீடிக்கிறது. குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக பதவி உயா்வு, பணி மேம்பாடு வழங்கப்படவில்லை.
ஆனால், அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் பதவி உயா்வு, பணி மேம்பாடு பெற்று 6 ஆண்டுகளாக பலன்களை அனுபவித்து வருகின்றனா். ஒரே தகுதியில் பணிபுரியும் ஆசிரியா்களில் அரசுக் கல்லூரிகளில் ஒருவிதமாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஒருவிதமாகவும் நடத்தப்படுவது மாற்றான் தாய் மனப்பான்மை போன்றது. எனவே, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கும் விரைந்து பதவி உயா்வு, பணிமேம்பாடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், திருச்சி மண்டலத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் இருபால் ஆசிரியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.