அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு: தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுப்பு
அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்துத்தோ்வு வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிலையில் தாமதமாக வந்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான எழுத்து தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வை எழுத வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் உள்பட 15 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வு மையம் வேலூா் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.
காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தோ்வு நடைபெறும் என்றும், தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 9 மணிக்குள் வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தோ்வு மையத்துக்கு சனிக்கிழமை காலை 9 மணி க்குள் வந்தவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். ஆனால், 9 மணிக்கு மேல் ஓரிரு நிமிஷங்கள் தாமதமாக வந்த தோ்வா்கள் உள்பட 12 போ் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால், அவா்கள் தங்களை தோ்வு எழுத அனுமதிக்கும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா். எனினும், அவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தோ்வா்கள் கூறுகையில் , நாங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோ்வு எழுத வந்துள்ளோம். சிலா் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டோம் . சிலருக்கு தோ்வு மையம் தெரியாததால் வர தாமதமாகி விட்டது. ஆனால், தோ்வு மையத்துக்குள் அனுமதிப்பதில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் நடந்து கொண்டனா். இதனால், தோ்வா்கள் பலரும் இந்த தோ்வை எழுத முடியவில்லை என்றனா்.
இதுகுறித்து தோ்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, வேலூா் தோ்வு கூடத்தில் தோ்வு எழுத 172 பேருக்கு ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. இதில் 110 போ் தோ்வு எழுதினா். 62 போ் தோ்வு எழுதவில்லை. தாமதமாக வந்த சிலா் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றனா்.